பலன்தரும் பரிகாரத்  தலம்

கபிஸ்தலம் ஸ்ரீகஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோயில் மன்னன் இந்திரஜ்யும்னன்.
பலன்தரும் பரிகாரத்  தலம்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்:
கபிஸ்தலம் ஸ்ரீகஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோயில்

மன்னன் இந்திரஜ்யும்னன். சிறந்த விஷ்ணு பக்தன். எப்போதும் ஸ்ரீமந் நாராயணனையே சிந்தையில் கொண்டிருப்பான். ஸ்ரீவிஷ்ணுவைத் துதிக்காமல் எந்தச் செயலும் செய்வதும் இல்லை. பல நேரங்களில் இந்த உலகையே மறந்து விஷ்ணு பூஜையில் ஈடுபட்டிருப்பான். அப்போது அவனை யாரும் குறுக்கிடவோ, சென்று பார்க்கவோ மாட்டார்கள். அப்படி ஒரு கட்டளையை விதித்திருந்தான் மன்னன் இந்திரஜ்யும்னன்.
 அப்படி ஒரு நாள்- மன்னன் விஷ்ணு பூஜையில் லயித்திருந்த நேரம்... கோபக்கார முனிவர் என்று புகழ்பெற்ற துர்வாசர் மன்னனைக் காண அரண்மனைக்கு வந்தார். அவர் வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. மன்னன் பூஜை அறையை விட்டு வெளிவரக் காணோம். துர்வாசரும் பணியாளர்களிடம் கேட்டுப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். திடீரென்று மன்னன் பூஜை செய்யும் அறைக்கே சென்று அவன் முன்பு நின்றார். அப்படியாவது தன் வருகையை அவன் அறிந்து எழுந்துவரட்டும் என்று நினைத்தார். ஆனால், துர்வாசர் எதிரே நின்றும் மன்னனுக்கு தியானம் கலையவில்லை. விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.
 முனிவருக்கு கோபம். தன்னை மன்னன் வேண்டுமென்றே உதாசீனம் செய்கிறான் என்று எண்ணினார். அவருக்குள் கிளர்ந்த கோபம் அந்த அறையில் அவர் குரலை கம்பீரமாக எதிரொலிக்கச் செய்தது. மன்னனைப் பார்த்து உரக்கச் சபித்தார்... மன்னா நீ கர்வம் நிறைந்தவனாக உள்ளாய். நீ ஏதோ பக்தியில் சிறந்தவனாக எண்ணிக் கொண்டு மமதை கொண்டுள்ளாய். முனிவனை மதிக்கத் தெரியாத நீ, விலங்குகளில் மதம் பிடித்த யானையாகக் கடவாய் என்று சாபமிட்டார்.
 முனிவரின் கோப வார்த்தைகளால் சாபத்தின் விபரீதத்தைக் கேட்ட மன்னன் அதிர்ந்தான். அவரிடம் மன்னிப்பு கோரினான். தனக்கு பாப விமோசனம் அளிக்குமாறு கதறினான். அவனின் நிலை கண்ட துர்வாசர் இரக்கம் கொண்டார். சரி... கொடுத்த சாபம் கொடுத்ததுதான். நீ யானையாக ஆனாலும், திருமால் மீது பக்தி கொண்டவனாக, யானைகளின் அரசனாகவே திகழ்வாய். உனக்கு சாப விமோசனத்தை பெருமாளே அருள்வார் என்றார்.
 ஒரு குளம். அதன் கரையில் கூஹு என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். குளத்துக்கு வந்து குளிப்பவர்களின் காலைப் பிடித்து இழுத்து, குளத்தில் மூழ்கடித்து துன்பப் படுத்துவதே அவன் வேலை. இதனால் பலரும் அந்தக் குளத்துக்கு வரவே அச்சப்பட்டனர். இந்நிலையில் ஒரு நாள் அகத்திய முனிவர் அங்கே வந்தார். சிவ பூஜை உள்ளிட்ட தினக் கடன்களை முடிக்க குளத்துள் இறங்கினார். அவரையும் இந்த அரக்கன் அதே பாடாய்ப் படுத்தினான். அகத்தியர் கோபம் கொண்டார். உன் குணத்துக்கு ஏற்ப நீ முதலையாக மாறுவாய் என்று சாபமிட்டார். இதைக் கேட்ட அரக்கன் நடுங்கினான். சாப விமோசனம் வேண்டினான். அதற்கு அவர், உனக்கு ஸ்ரீவிஷ்ணுவின் கரத்தால் சாப விமோசனம் கிட்டும் என்று கூறிச் சென்றார்.
 ஒரு நாள்... அந்தக் குளத்துக்கு யானைகளின் அரசனான கஜேந்திரன் வந்தது. கையில் தாமரை மலர் பறித்து விஷ்ணுவுக்குச் சூட்டுவது அதன் வாடிக்கை. அன்றும் அப்படித்தான். மலர் பறிக்க குளத்தில் இறங்கிய யானையின் காலை இந்த முதலை கவ்விப் பிடித்தது. முதலையின் பிடியில் இருந்து தப்ப இயலாத யானை, தான் பூஜிக்கும் ஸ்ரீவிஷ்ணுவையே ஆதிமூலமே காப்பாற்று என்றது. யானையின் குரல் கேட்டு ஓடி வந்த ஸ்ரீவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் முதலையின் தலையை அறுத்து, சாப விமோசனம் அளித்தார். கஜேந்திரனான யானையும் துர்வாசரின் சாபத்தில் இருந்து விடுபட்டு நற்கதி அடைந்தது.
 இவ்வாறு பெருமாள் ஒரு யானைக்கு முக்தி அளித்த தலம் இந்தக் கபிஸ்தலம். ஸ்ரீமந் நாராயணனின் 108 திவ்ய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று.
 கோகுலமும் ஆயர்பாடியும் கோபியருக்கும் நைமிசாரண்யம் மகரிஷிகளுக்கும் அருள் புரியப்பட்ட தலமாகத்திகழ்கின்றன. அதுபோல், கபிஸ்தலம் ஆஞ்சநேயருக்கும் கஜேந்திரனுக்கும் அருள் புரியப் பெற்ற தலமாகத் திகழ்கிறது.
 கபி என்றால் குரங்கு என்று பொருள். இங்கே ஆஞ்சநேயர் ஸ்ரீமந் நாராயணனின் திருக்காட்சியை ஸ்ரீராமபிரானின் உருவில் பெற்றார். பெருமாள் இங்கே ஆஞ்சநேயருக்கு அருள் புரிந்ததால், இந்தத் தலம் கபி-தலம் என்று பெயர் பெற்றது.
 இந்தத் தலத்தின் சிறப்பு, யானையான மிகப் பெரிய உருவில் இருக்கும் உயிரினத்துக்கும், குரங்கான சிறிய உயிரினத்துக்கும் பெருமாள் அருள் புரிந்ததைப் பறை சாற்றுவதாகும். சகல உயிருக்கும் பெருமாள் அருள் புரிவார் என்பதைக் காட்டித் தரும் தலம். ஒவ்வொரு தலத்துக்கும் பரிகாரங்கள் இருக்கும். இந்தத் தலத்துக்கான பரிகாரமே, தங்கள் கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி, என்னால் இயல்வது ஒன்றும் இல்லை பெருமாளே ஆதிமூலமே நீயே சரண். என்னைக் காப்பாற்று என்று, தலைக் கனம் இறங்க, பிரார்த்தித்தால் போதுமானது.
 பெருமாள் அருள் வழங்க ஓடோடி வருகிறான். இதனால்தான் இங்கே வந்து பக்தர்கள், தங்கள் கைகளை உயர்த்தி ஆதிமூலமே என்று கண்களில் நீர் பெருக பெருமானை வணங்குகிறார்கள்.
 பெருமாள் இங்கே புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சந்நிதி விமானம் ககனா க்ருத விமானம் என்று அழைக்கப்படுகிறது. மூலவருக்கு கஜேந்திர வரதர் என்ற திருநாமம். யானை ஆதிமூலமே என்று அழைத்ததால், பெருமாள் ஆதிமூலப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். தாயாருக்கு ரமாமணிவல்லி, பொற்றாமரையாள் என்ற திருநாமங்கள். தல விருட்சமாக மகிழம்பூ திகழ்கிறது. கஜேந்திரனுக்கு அருள் புரியக் காரணமாக இருந்த கஜேந்திர புஷ்கரிணி தீர்த்தம், கபில தீர்த்தம் ஆகியன தல தீர்த்தங்களாகத் திகழ்கின்றன.
 இத்தலப் பெருமாளை திருமழிசை ஆழ்வார், ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன், என்றே பாடினார். எனவே பெருமாளுக்கு கண்ணன் என்ற பெயரே வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய ஐந்து கிருஷ்ணன் தலங்களும் சேர்த்து, இவை பஞ்சகிருஷ்ணாரண்ய úக்ஷத்ரங்கள் எனப்படுகின்றன.
 கூற்றமும் சாரா, கொடுவினையும் சாரா, தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்- ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு- என்று இந்தப் பெருமாளைப் பாடினார் திருமழிசையாழ்வார்.
 திருவிழா: ஆடி பெüர்ணமியில் கஜேந்திர மோட்ச லீலை. வைகாசி விசாகத்தில் தேர்த்திருவிழா, பிரமோற்ஸவம் ஆகியன. விஷ்ணுவாலயங்களில் பொதுவாக நடக்கும் அனைத்து விழாக்களுமே விமரிசையாக நடக்கின்றன.
 சந்நிதி திறக்கும் நேரம்: காலை 7-12 மாலை 5-7.30 வரை.
 இருப்பிடம்: கபிஸ்தலம். கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவு.
 தகவலுக்கு: 04374 - 223434

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com